|
|
|
|
|
|
|
|
எது சிறந்த கல்வி தெரியுமா? – சுவாமி விவேகானந்தர்
மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.
நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.
.
நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.
மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும்.
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும். கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment